search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சென்னை குடிநீர்"

    • நெல்லூர் மாவட்டம் வெங்கடகிரி சட்டமன்ற உறுப்பினர் ராமகிருஷ்ணா திறந்து வைத்தார்.
    • கிருஷ்ணா நீர் வினாடிக்கு 1,600 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

    ஆந்திரா மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து சென்னைக்கு கிருஷ்ணா நீர் திறக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, வினாடிக்கு 1,600 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ள நிலையில், படிப்படியாக 2,000 கன அடியாக உயர்த்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

    கிருஷ்ணா நீரை, நெல்லூர் மாவட்டம் வெங்கடகிரி சட்டமன்ற உறுப்பினர் ராமகிருஷ்ணா திறந்து வைத்தார்.

    சென்னையின் குடிநீர் தேவைக்காக கண்டலேறு அணையிலிருந்து நீர் திறந்து விடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • சென்னையின் குடிநீர் தேவையில் 3-ல் ஒரு பங்கை வீராணம் ஏரி பூர்த்தி செய்து வந்தது.
    • 6 மாத காலத்திற்கு தேவையான குடிநீர் கைவசம் இருப்பதால் சென்னைக்கு தட்டுப்பாடின்றி குடிநீர் வினியோகம் செய்ய முடியும்.

    சென்னை:

    சென்னை மாநகரின் குடிநீர் தேவைக்கு பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரிகளில் இருந்து கிடைக்கும் தண்ணீர் மட்டுமின்றி வீராணம் ஏரியில் இருந்தும் ராட்சத குழாய் மூலம் தண்ணீர் கொண்டு வரப்பட்டு தென்சென்னை பகுதிகளுக்கு வினியோகம் செய்யப்பட்டு வந்தது.

    இதில் வீராணம் ஏரி இப்போது வறண்டு விட்ட நிலையில் நெம்மேலியில் இருந்து வீராணம் குழாய் வழியாக தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அதுவும் தற்போது குறைந்துவிட்டது. இதனால் தென்சென்னை பகுதி மக்களுக்கு இப்போது நெம்மேலியில் உள்ள கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் மூலம் தினமும் தடையின்றி குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறியதாவது:-

    சென்னையின் குடிநீர் தேவையில் 3-ல் ஒரு பங்கை வீராணம் ஏரி பூர்த்தி செய்து வந்தது. வீராணம் ஏரியில் இருந்து கிட்டத்தட்ட 90 மில்லியன் லிட்டர் தண்ணீரும் அங்குள்ள ஆழ்குழாய் கிணறுகள் மூலம் 90 மில்லியன் லிட்டர் என்.எல்.சி. தண்ணீரும் சென்னைக்கு வந்தது.

    ஆனால் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் வீராணம் ஏரி வறண்டதால் நெம்மேலியில் உள்ள கடல் குடிநீர் மூலம் தினமும் 200 எம்.எல்.டி.க்கு மேல் குடிநீர் கிடைத்து வருகிறது. இதன் மூலம் தென் சென்னை பகுதி மக்களுக்கு தடையின்றி குடிநீர் வினியோகம் நடைபெற்று வருகிறது.

    இது மட்டுமின்றி திரிசூலம் கல்குவாரி மாங்காடு சிக்கராயபுரம், எருமையூர் கல்குவாரிகளில் இருந்தும் குடிநீர் எடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    6 மாத காலத்திற்கு தேவையான குடிநீர் கைவசம் இருப்பதால் சென்னைக்கு தட்டுப்பாடின்றி குடிநீர் வினியோகம் செய்ய முடியும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • வீராணம் ஏரியின் மொத்த கொள்ளளவு 1465 மில்லியன் கனஅடியாகும்.
    • தற்போது நீர்மட்டம் 2 மில்லியன் கனஅடியாக குறைந்துள்ளதாக தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது.

    சென்னை மக்கள் குடிநீருக்காக புழல், செம்பரம்பாக்கம் உள்ளிட்ட ஏரிகளில் இருந்து தண்ணீர் கொண்டு வரப்படுகிறது. கூடுதல் குடிநீர் கிடைக்க வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு ராட்சத குழாய் மூலம் தண்ணீர் கொண்டு வரப்பட்டு, சென்னை மக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் வீராணம் ஏரி நீர்மட்டம் வெகுவாக குறைந்துள்ளதால் வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு குடிநீர் அனுப்புவது நிறுத்தப்பட்டுள்ளது.

    வீராணம் ஏரியின் மொத்த கொள்ளளவு 1465 மில்லியன் கனஅடியாகும். மேட்டுர் அணை திறக்கப்பட்டு, அதன்மூலம் வீராணம் ஏரிக்கு காவிரி நீர் வந்தடைந்தபோது ஏரி முழுக் கொள்ளளவை எட்டியது. சுமார் 30 ஆயிரம் ஏக்கருக்கு மேற்பட்ட விளைநிலங்களுக்கு வீராணம் ஏரியில் இருந்து நீர் திறந்து விடப்பட்டது.

    மேலும் சென்னைக்கு தினந்தோறும் 76 கனஅடி நீர் குடிநீருக்காக அனுப்பி வைக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில்தான் தற்போது ஏரியின் கொள்ளளவு 2 மில்லியன் கனஅடி நீராக குறைந்துள்ளது. நேற்று சென்னைக்கு அனுப்பப்பட்ட நீர் 3 அடியாக குறைக்கப்பட்டது.

    இந்த நிலையில்தான் இன்று முழுவதுமாக நிறுத்தப்பட்டுள்ளது. விவசாயி நிலங்களுக்கு திறந்து விடப்பட்ட தண்ணீரும் நிறுத்தப்பட்டுள்ளது.

    வடலூர் வாலாஜா ஏரியில் இருந்து நீர் எடுக்க மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வாலாஜா ஏரியின் நீர் ஆதாரம் என்எல்சி சுரங்கங்களில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீர் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

    • தேங்கிய மழைநீர் பயன்படுத்தும் வகையிலும் புதிய திட்டத்தை சென்னை குடிநீர் வாரியம் உருவாக்கி உள்ளது.
    • தண்ணீரை செம்பரம்பாக்கத்துக்கு கொண்டு செல்ல ராட்சத இரும்பு குழாய்கள் பதிக்கும் பணி நடந்து வருகிறது.

    சென்னை:

    மாங்காடு அருகே உள்ள சிக்கராயபுரம் பகுதியில் ஏராளமான கல் குவாரிகள் உள்ளன. 25க்கும் மேற்பட்ட கல்குட்டைகளில் சமீபத்தில் பெய்த மழையால் தண்ணீர் தேங்கி குளம் போல் காட்சி அளிக்கிறது.

    இந்த தண்ணீரை பயன்படுத்தாமல் விட்டு விடுவதால் பருவமழை காலங்களில் அதிக அளவில் வரும் தண்ணீர் அந்த பகுதியில் உள்ள கிராமங்களுக்குள் புகுந்து பெரிய அளவில் வெள்ளப் பாதிப்புகளை ஏற்படுத்தும்.

    இதை தவிர்க்கும் வகையிலும், தேங்கிய மழைநீர் பயன்படுத்தும் வகையிலும் புதிய திட்டத்தை சென்னை குடிநீர் வாரியம் உருவாக்கி உள்ளது.

    இந்திட்டத்தின் படி கல்குட்டைகளில் தேங்கி கிடக்கும் மழைநீரை குழாய்கள் மூலம் செம்பரம்பாக்கம் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்துக்கு கொண்டு சென்று சுத்திகரித்து சென்னைக்கு குடிநீராக சப்ளை செய்யப்படும்.

    தற்போது குடிநீர் வாரியம் ஆய்வு செய்ததில் 25 கல்குட்டைகளில் 0.350 டி.எம்.சி. தண்ணீர் தேங்கி இருப்பது தெரியவந்து உள்ளது.

    இந்த தண்ணீரை செம்பரம்பாக்கத்துக்கு கொண்டு செல்ல ராட்சத இரும்பு குழாய்கள் பதிக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பணிகள் இன்னும் 2 நாளில் முடிந்து விடும். அதன் பிறகு தினமும் 30 மில்லியன் லிட்டர் அளவுக்கு செம்பரம்பாக்கம் சுத்திகரிப்பு நிலையத்துக்கு கொண்டு செல்லப்படும் என்று குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

    வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பு கல்குட்டைகளில் இருக்கும் தண்ணீரை எடுத்துவிட திட்டமிட்டு உள்ளனர். இதனால் மழை காலங்களில் பெருமளவு தண்ணீர் கல் குட்டைகளில் தேங்கும். கிராமங்களுக்குள் வெள்ளம் புகுவது தவிர்க்கப்படும்.

    சென்னைக்கு குடிநீர் எடுக்கும் சிக்கராயபுரம் கல்குவாரி தண்ணீரை எடுக்க முடியாத நிலை ஏற்படும்போது எருமையூர் குவாரியில் இருந்து நீர் எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
    பூந்தமல்லி:

    கடந்த ஆண்டு பருவமழை பொய்த்ததால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர்மட்டம் அடியோடு குறைந்தது. சோழவரம், செம்பரம்பாக்கம் ஏரிகள் வறண்டு விட்டன. புழல், பூண்டி ஏரியில் இருந்து இன்னும் சில நாட்களுக்கு மட்டுமே தண்ணீர் பெற முடியும்.

    ஏரிகளில் தண்ணீர் இல்லாததால் வீடுகளுக்கு வினியோகிக்கப்படும் நீரின் அளவு பாதியாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது.

    தினந்தோறும் மக்கள் காலி குடங்களுடன் தண்ணீர் லாரிக்காக காத்திருக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க குடிநீர் வாரிய அதிகாரிகள் மாற்று நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

    கல்குவாரி நீர் மற்றும் காஞ்சிபுரம்-திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள விவசாய கிணற்று தண்ணீரை எடுத்து வினியோகித்து வருகின்றனர். இந்த தண்ணீரும் போதுமான அளவு இல்லாததால் சென்னை நகரில் குடிநீர் தட்டுப்பாடு தலைவிரித்து ஆடுகிறது.

    பெரும்பாலும் தண்ணீர் லாரிகளை நம்பியே பொதுமக்கள் இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தண்ணீருக்காக முன்பதிவு செய்தாலும் 20 நாட்களுக்கு மேல் காத்திருக்க வேண்டியிருக்கிறது. இதனால் தனியார் தண்ணீர் லாரிகளை கூடுதல் பணம்கொடுத்து முன்பதிவு செய்து பெற்று வருகிறார்கள்.

    நங்கநல்லூர், மடிப்பாக்கம், பெருங்குடி, பாலவாக்கம், நீலாங்கரை, மூவரசம்பேட்டை, கீழ்கட்டளை உள்ளிட்ட புறநகர் பகுதியில் வசிப்பவர்களுக்கு தனியார் தண்ணீர் லாரிகளே கை கொடுத்து வருகிறது.

    இதற்கிடையே சென்னை குடிநீருக்காக எடுக்கப்படும் சிக்கராயபுரம் கல்குவாரியில் தண்ணீரின் அளவு வேகமாக குறைந்து வருகிறது. ஒரு குவாரியில் நீர்மட்டம் அடியோடு குறைந்து விட்டது.

    அருகில் உள்ள மற்றொரு குவாரியில் இருக்கும் தண்ணீரை இன்னும் 2 மாதத்துக்கு மட்டுமே பயன்படுத்த முடியும். எனவே வரும் நாட்களில் குடிநீர் தட்டுப்பாடு மேலும் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    இதற்கு மாற்று ஏற்பாடாக தாம்பரம் அருகே உள்ள எருமையூர் கல்குவாரி தண்ணீரை எடுப்பதற்கான நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். சிக்கராயபுரம் கல்குவாரி தண்ணீரை எடுக்க முடியாத நிலை ஏற்படும் போது எருமையூர் குவாரியில் இருந்து நீர் எடுக்கப்படும் என்று தெரிகிறது.

    இது குறித்து அதிகாரி ஒருவர் கூறும்போது, “சிக்கராயபுரம் குவாரியில் இருந்து ஏப்ரல் முதல் வாரம் முதல் தண்ணீர் எடுத்து வினியோகித்து வருகிறோம். 100 நாட்களுக்கு நீரை எடுக்க திட்டமிட்டோம். ஆனால் எதிர்பார்த்ததைவிட கூடுதல் நாட்களுக்கு தண்ணீர் கிடைக்கும். எருமையூர் கல்குவாரி நீரை விரைவில் சப்ளை செய்ய உள்ளோம். வீராணம் ஏரி தண்ணீரும் இருப்பதால் சென்னையில் குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க முடியும்” என்றார்.

    சென்னை குடிநீர் தேவைக்கு கண்டலேறு அணையில் இருந்து திறந்துவிடப்பட்ட கிருஷ்ணா தண்ணீர் 3 நாட்களில் தமிழக எல்லைக்கு வந்தடைய வாய்ப்பு உள்ளது.
    ஊத்துக்கோட்டை:

    சென்னை நகர மக்களின் குடிநீர் தேவை புழல், பூண்டி, சோழவரம், செம்பரம்பாக்கம், வீராணம் ஏரிகளில் சேமித்து வைக்கும் தண்ணீரை கொண்டு நிறைவேற்றப்படுகிறது.

    மேலும் மீஞ்சூரில் உள்ள கடல் நீரை குடிநீராக்கும் நிலையத்திலிருந்து பெறப்படும். தண்ணீர், பூண்டி அருகே உள்ள புல்லரம்பாக்கம், சிறுவானூர்கண்டிகை உட்பட 10 பகுதிகளில் உள்ள ராட்சத ஆழ்துளை கிணறுகளில் இருந்து உறிஞ்சி எடுக்கப்படும் நீர் சென்னை மக்களின் தண்ணீர் தேவையை நிறைவேற்றுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

    இந்த நிலையில் பருவமழை பொய்த்ததால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர்வரப்பு குறைந்து உள்ளது. பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பபாக்கம் ஏரிகளின் மொத்த கொள்ளளவு 11.05 டி.எம்.சி. ஆகும்.

    இந்த ஏரிகளில் தற்போது இருப்பில் உள்ள தண்ணீரை கொண்டு சில நாட்களுக்குதான் சென்னையில் குடிநீர் வினியோகம் செய்ய முடியும்.

    இந்நிலையில் கடந்த 9-ந் தேதி ஜதராபாத்தில் கிருஷ்ணா நதி நீர் மேலாண்மை வாரிய கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழக பொதுப் பணித்துறை தலைமை பொறியாளர் முரளீதரன் தலைமையில் அதிகாரிகள் கலந்துகொண்டு கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின்படி கண்டலேறு அணையிலிருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

    அப்போது தண்ணீர் திறந்து விட முடியாத என்று ஆந்திர மாநில பொதுப் பணித்துறை அதிகாரிகள் கூறிவிட்டனர்.

    இந்நிலையில் ஆந்திராவில் உள்ள விவசாயிகள் பருவ மழை பெய்யும் என்ற நோக்கத்தில் நெற்பயிரிட்டனர். ஆனால் மழை பொய்த்து போனதால் தெலுங்கு கங்கை திட்டத்தின் கீழ் கிருஷ்ணா நதி கால்வாயில் தண்ணீர் திறந்து விடும்படி விவசாயிகள் ஆந்திர அரசுக்குக்கு கோரிக்கை விடுத்தனர்.

    இந்த கால்வாய் வழியாகதான் கிருஷ்ணா நதி நீர் பூண்டி ஏரிக்கு பாய்ந்துவரும். விவசாயிகளின் கோரிக்கையை ஏற்ற ஆந்திர அரசு இன்று காலை கண்டலேறு அணையிலிருந்து தண்ணீர் திறந்து விட்டது. வினாடிக்கு 1000 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது.

    இந்த தண்ணீர் பூண்டி ஏரிக்கும் வந்து சேருகிறது. நீர்திறப்பு படிப்படியாக அதிகரிக்கப்படும் என்று ஆந்திர அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    சென்னைக்கு குடிநீர் வழங்கும் 4 ஏரிகளில் இன்று காலை வெறும் 949 மில்லியன் கனஅடி தண்ணீர்தான் இருப்பு உள்ளது. இந்த தருணத்தில் கண்டலேறு அணையிலிருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது சென்னை மக்களுக்கு ஆறுதல் தரும் வி‌ஷயமாகும்.

    கண்டலேறு அணையில் திறந்துவிடப்பட்ட தண்ணீர் 3 நாட்களில் தமிழக எல்லைக்கு வந்தடைய வாய்ப்பு உள்ளது. அதன் பின்னர் பூண்டி ஏரிக்கு செல்லும்.

    பூண்டி ஏரியில் 3321 மில்லியன் கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கலாம். இன்று காலை 6 மணி நிலவரப்படி வெறும் 172 மில்லியன் கனஅடி தண்ணீர்தான் இருப்பில் உள்ளது. கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின்படி ஆந்திர அரசு ஆண்டுக்கு 12 டி.எம்.சி. தண்ணீர் தமிழகத்துக்கு தர வேண்டும். கடந்த ஆண்டு 3.88 டி.எம்.சி. தண்ணீர் தமிழகத்துக்கு கிடைத்தது.

    இதற்கிடையே தற்போது கண்டலேறு அணையில் 11.257 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது. எனவே இந்த ஆண்டு கிருஷ்ணா தண்ணீர் கூடுதலாக கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    சென்னையில் 15 ஆண்டுகளுக்குப்பின் மழையளவு 55 சதவீதம் குறைந்துள்ளதால் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கருதுகின்றனர்.
    சென்னை:

    தமிழ்நாட்டில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை பொய்த்துவிட்டது. மழை சீசன் முடிவடையும் தருவாயில் உள்ளது. பல மாவட்டங்களில் மழை குறைவாகவே பெய்துள்ளது. இருந்தாலும் சென்னையில் மிகவும் குறைந்த அளவே மழை பெய்து இருக்கிறது.

    சென்னையில் இதுவரை வடகிழக்கு பருவமழை 84 செ.மீ. பெய்து இருக்க வேண்டும். ஆனால் 35 செ.மீ. மட்டுமே பெய்துள்ளது. கடந்த 2003-ம் ஆண்டில் 31 செ.மீ. மழைதான் பெய்து இருந்தது. தற்போது 15 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அதே நிலை ஏற்பட்டுள்ளது.

    பொதுவாக சென்னை மாவட்டத்தில் ஆண்டுக்கு சராசரியாக 140 செ.மீ. மழை பெய்ய வேண்டும். ஆனால் இந்த ஆண்டு 83 செ.மீ. மட்டுமே மழை பெய்துள்ளது.

    கடந்த 2003-ம் ஆண்டில் 31 செ.மீ. மழையே பெய்து இருந்ததால் அப்போது கடுமையான குடிநீர் தட்டுப்பாடு உருவானது. அதே நிலை தற்போதும் ஏற்படும் என நிபுணர்கள் கருதுகின்றனர். சென்னைக்கு குடிநீர் தரும் ஏரிகள் மூலம் இன்னும் 2 மாதங்களுக்கு மட்டுமே தண்ணீர் வழங்க முடியும்.



    எனவே குன்றத்தூர் அருகே உள்ள சிக்கராயபுரம் மற்றும் எருமையூரில் உள்ள கல்குவாரிகள், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள விவசாய கிணறுகள் மற்றும் ரெட்டேரி, அயனம்பாக்கம், பெரும்பாக்கம் ஏரிகளில் இருந்து குடிநீர் வழங்க சென்னை மெட்ரோ நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.

    மேலும் நெய்வேலியில் 240 மீட்டர் ஆழத்தில் 9 ஆழ்துளை குழாய் கிணறுகள் அமைத்து அதன்மூலம் சென்னைக்கு குடிநீர் கொண்டு வரவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
    தொடர் மழை காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, சோழவரம், புழல் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. #PuzhalLake
    திருவள்ளூர்:

    வங்கக்கடலில் உருவாகி உள்ள குறைந்த காற்றழுத்தம் காரணமாக நேற்று முன்தினம் மாலை முதல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

    சென்னையில் இன்று காலையும் பரவலாக மழை பெய்தது. புறநகர் பகுதியான ஆவடி, அம்பத்தூர், புழல், சோழவரம் உள்ளிட்ட பகுதிகளில் விட்டு விட்டு கனமழை கொட்டியது.

    திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. பழவேற்காடு, மீஞ்சூர், பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, புழல், பூந்தமல்லி உள்ளிட்ட இடங்களிலும் பலத்த மழைபெய்தது. ஊத்துக்கோட்டையில் நேற்று மாலையில் தொடங்கிய மழை நள்ளிரவு வரை நீடித்தது. இதனால் தாழ்வான இடங்களில் வெள்ளம் தேங்கியது.

    தொடர் மழை காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, சோழவரம், புழல் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.

    செம்பரம்பாக்கம் ஏரி நீர்ப்பிடிப்பு பகுதியில் போதிய மழை இல்லாததால் எதிர்பார்த்த நீர் வரத்து இல்லை.இந்த 4 ஏரிகளிலும் மொத்தம் 11 ஆயிரத்து 257 மில்லியன் கனஅடி நீர் சேமித்து வைக்கலாம். இன்று காலை நிலவரப்படி மொத்தம் 1,704 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது.

    கடந்த 3-ந் தேதி 4 ஏரிகளையும் சேர்த்து 1,681 மில்லியன் கனஅடி தண்ணீர் இருந்தது. கடந்த 2 நாட்களில் 23 மில்லியன் கனஅடி நீர் அதிகரித்து உள்ளது.  #PuzhalLake

    சென்னைக்கு குடிநீர் வழங்கும் வீராணம் ஏரி, பூண்டி ஏரிகளில் நீர்மட்டம் அதிகரித்துள்ளது. வரும் நாட்களில் பருவமழை தீவிரமடைந்தால் நீர்மட்டம் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #Veeranamlake #Poondilake
    ஊத்துக்கோட்டை:

    சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் முக்கிய ஏரிகளாக பூண்டி மற்றும் கடலூர் மாவட்டத்தில் உள்ள வீராணம் ஏரிகள் உள்ளன.

    கடந்த சில நாட்கள் பெய்த தொடர் மழையின் காரணமாக பூண்டி, வீராணம் ஏரிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. இதனால் நீர் மட்டம் உயர்ந்து உள்ளது. இதையடுத்து சென்னை குடிநீருக்கு கூடுதலாக தண்ணீர் திறக்க அதிகாரிகளாக முடிவு செய்து உள்ளனர்.

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அடுத்த லால்பேட்டையில் உள்ள வீராணம் ஏரியின் மொத்த நீர்மட்டம் 47.50 அடி.

    மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்காக திறக்கப்பட்ட தண்ணீர் கடந்த ஜூலை மாதம் 26-ந் தேதி முதல் வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு வந்தது. தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்ததால் வீராணம் ஏரி அதன் முழு கொள்ளளவான 47.50 அடியை எட்டியது. இதையடுத்து சென்னைக்கும், விவசாய பாசனத்துக்கும் தண்ணீர் திறக்கப்பட்டது.

    கடந்த சில வாரங்களுக்கு முன்பு மழை இல்லாததாலும், வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததாலும் வீராணம் ஏரியின் நீர்மட்டம் படிப்படியாக குறைந்து வந்தது.

    இந்த நிலையில் தற்போது பெரம்பலூர், அரியலூர் ஆகிய பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மேலும் வீராணம் ஏரியை சுற்றியுள்ள பகுதிகளிலும் மழை பெய்கின்றது. இதனால் கீழணைக்கு வினாடிக்கு 2 ஆயிரம் கன அடி வந்து கொண்டிருக்கிறது. இதில் இன்று 1,350 கனஅடி நீர் வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

    மேலும் செங்கால் ஓடை, பாப்பாக்குடி ஓடை உள்ளிட்ட பல்வேறு வாய்க்கால்கள் மூலமும் ஏரிக்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    இதனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு 45 அடிக்கு கீழ் இருந்த வீராணம் ஏரியின் நீர்மட்டம் தற்போது கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. நேற்று ஏரியின் நீர்மட்டம் 46.60 அடியாக இருந்தது. இன்று அது 46.70 அடியாக உயர்ந்துள்ளது.

    ஏரியில் இருந்து சென்னைக்கு 72 கனஅடி தண்ணீர் அனுப்பப்பட்டு வந்தது. நேற்று 70 கனஅடி தண்ணீர் அனுப்பபட்டது. இந்த நிலையில் ஏரியின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதால் இன்று வினாடிக்கு 74 கனஅடி தண்ணீர் சென்னைக்கு அனுப்பப்பட்டது.

    இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறும்போது,

    கஜா புயல் காரணமாக பலத்த மழை பெய்யும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் புயலின்போது தேவையான மழை இல்லாததால் தற்போது ஏரியின் நீர்மட்டத்தை உயர்த்தும் பணியில் ஈடுபட்டுள்ளோம். விவசாய பாசனத்துக்கு தண்ணீர் தேவை உள்ளது என்பதாலும், சென்னை மக்களின் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டும் வீராணம் ஏரியில் தொடர்ந்து தண்ணீர் தேக்கி வைக்கப்படுகிறது.

    47 அடிக்கு மேல் தண்ணீர் வந்து விட்டால் கீழணையில் இருந்து வீராணம் ஏரிக்கு தண்ணீர் வருவது நிறுத்தப்படும். கீழணையில் இருந்து கொள்ளிடம் ஆற்றுக்கு அதிகளவில் தண்ணீர் திறந்து விடப்படும். வீராணம் ஏரி விரைவில் முழு கொள்ளளவை எட்டும் என்றார்.

    பூண்டி ஏரியின் உயரம் 35 அடி. இன்று காலை நிலவரப்படி ஏரியின் நீர்மட்டம் 21.38 அடியாக பதிவானது. 387 மில்லியன் கன அடி தண்ணீர் உள்ளது (மொத்த கொள்ளளவு 3231 மில்லியன் கன அடி).

    ஏரியில் இருந்து சென்னை குடிநீருக்கு 20 கன அடி தண்ணீர் பேபி கால்வாய் வழியாக அனுப்பப்படுகிறது. வரும் நாட்களில் பருவமழை தீவிரமடைந்தால் பூண்டி ஏரியின் நீர்மட்டம் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #Veeranamlake #Poondilake

    சென்னை நகர மக்களுக்கு புதிய நீர் ஆதாரமான ஏரி-குவாரிகளில் இருந்து தண்ணீர் சப்ளை செய்யப்படும் பட்சத்தில் குடிநீர் சப்ளை முழுமையாக பூர்த்தியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #ChennaiWater

    சென்னை:

    சென்னை நகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரிகள் உள்ளன. கோடை காலத்தில் ஏரிகளில் நீர் இருப்பு குறையும் போது சென்னைக்கு குடிநீர் சப்ளை பாதிக்கப்படுகிறது.

    கடந்த ஆண்டு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்ட போது போரூர் ஏரி, சிக்கராயபுரம் கல்குவாரியில் இருந்து தண்ணீர் எடுத்து சுத்திகரித்து வினியோகிக்கப்பட்டது. இதனால் குடிநீர் தட்டுப் பாட்டை சமாளிக்க முடிந்தது.

    இதைத் தொடர்ந்து சென்னை குடிநீர் ஆதாரங்களை விரிவுபடுத்தவும் புதிய நீர் ஆதாரங்களை கண்டறியவும் சென்னை குடிநீர் வாரியத்தின் மேலாண்மை இயக்குனர் அசோக் டோஸ்ரே, செயல் இயக்குனர் பிரபு சங்கர் ஆகியோரின் கீழ் சிறப்பு குழு ஏற்படுத்தப்பட்டது.

    அவர்கள் பொதுப்பணித் துறை, மத்திய நிலத்தடி நீர் ஆணையம், அண்ணா பல்கலைக்கழகம், கிங் இன்ஸ்டிடியூட் ஆகியவற்றுடன் இணைந்து ஆய்வு மற்றும் திட்டம் வகுக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    இதில் சென்னையின் புதிய குடிநீர் ஆதாரங்களாக போரூர் ஏரி, ரெட்டேரி, மணிமங்கலம் அயனம்பாக்கம், திருநீர்மலை, நேமம், அயப்பாக்கம், ஸ்ரீபெரும்புதூர், தென்னேரி, தையூர், சிட்லபாக்கம், மாம்பாக்கம், அரசன் கழனி, பெரும்பாக்கம், கொரட்டூர் ஆகிய 15 ஏரிகள் கண்டறியப்பட்டு உள்ளன.

    இதே போல சிக்கராயபுரம், எருமையூர், நன்மங்கலம், பம்மல், பல்லாவரம், திருநீர்மலை, நல்லம்பாக்கம் ஆகிய இடங்களில் உள்ள 7 கல்குவாரி நீரையும் பயன் படுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.

    புதிதாக கண்டறியப்பட்டுள்ள நீர் ஆதாரங்களான ஏரிகள் மற்றும் கல்குவாரிகளில் இருந்து தண்ணீரை ஆய்வுக்கு அனுப்பி உள்ளனர். இதன் முடிவை வைத்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

    இதற்கிடையே பலகட்ட ஆய்வுக்கு பிறகு ரெட்டேரியில் உள்ள நீரை சுத்திகரித்து குடிநீருக்கு பயன்படுத்தலாம் என்று பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது.

    அதன்படி சென்னை குடிநீருக்கு தினசரி 1 கோடி லிட்டர் பெறும் வகையில் ரெட்டேரியில் புதிய சுத்திகரிப்பு நிலையம் அமைக்க திட்டம் சமர்ப்பிக்கப்பட்டு இருக்கிறது. இதற்கான பணிகள் விரைவில் தொடங்க உள்ளன.

    சென்னை நகர மக்களுக்கு புதிய நீர் ஆதாரமான ஏரி-குவாரிகளில் இருந்து தண்ணீர் சப்ளை செய்யப்படும் பட்சத்தில் குடிநீர் சப்ளை முழுமையாக பூர்த்தியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #ChennaiWater

    கண்டலேறு அணையில் இருந்து திறக்கப்பட்டு ஒரு வாரத்தில் தமிழக எல்லைக்கு வரும் கிருஷ்ணா தண்ணீர் பூண்டி ஏரியில் தேக்கப்படும்.#Krishnawater

    ஊத்துக்கோட்டை:

    சென்னை நகர மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்றுவதில் பூண்டி ஏரி முக்கியமானதாக உள்ளது.

    ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து திறக்கப்படும் கிருஷ்ணா நீர் மற்றும் மழைநீர் பூண்டி ஏரியில் தேக்கி வைக்கப்பட்டு தேவைப்படும் போது சென்னை குடிநீருக்கு திறந்து விடப்படுகிறது.

    கிருஷ்ணா நதி நீர் ஒப்பந்தப்படி ஆந்திர அரசு வருடந்தோறும் 12 டி.எம்.சி. தண்ணீரை தமிழகத்துக்கு வழங்க வேண்டும்.

    ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டி.எம்.சி. தண்ணீர் ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டி.எம்.சி. தண்ணீரை அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு திறக்க வேண்டும்.

    இந்த ஆண்டு கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின் படி ஜனவரியில் திறந்து விடப்பட்ட தண்ணீர் மார்ச் மாதத்தில் நிறுத்தப்பட்டது. கண்டலேறு அணையில் நீர்மட்டம் குறைந்ததால் பூண்டி ஏரிக்கு தண்ணீர் தொடர்ந்து திறக்க முடியாத நிலை ஏற்பட்டது.

    இதற்கிடையே கோடை வெயில் காரணமாக பூண்டி ஏரியில் இருந்த தண்ணீர் பெருமளவு வறண்டு விட்டதால் புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கும், சென்னை குடிநீர் வாரியத்துக்கும் தண்ணீர் திறப்பு முற்றிலுமாக நிறுத்தப்பட்டது.

    ஜூலை மாத தவனையின் படி கண்டலேறு அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடும்படி தமிழக பொதுப் பணித்துறை அதிகாரிகள் ஆந்திர அரசுக்கு கடிதம் எழுதினர். ஆனால்போதிய தண்ணீர் இருப்பு இல்லாததால் பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறக்க இயலாது என்று ஆந்திர அதிகாரிகள் தெரிவித்து விட்டனர்.

    இந்த நிலையில் ஆந்திராவில் கிருஷ்ணா நதி நீர்பிடிப்பு பகுதியில் கடந்த 20 நாட்களுக்கு முன் வரலாறு காணாத பலத்த மழை பெய்தது. இதனால் கிருஷ்ணா நதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு ஸ்ரீசைலம் அணை முழுவதுமாக நிரம்பியது.

    அங்கிருந்து சோமசிலா அணைக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த அணையும் நிரம்பியதால் அங்கிருந்து கண்டலேறு அணைக்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    ஸ்ரீசைலத்திலிருந்து தண்ணீர் தொடர்ந்து வந்து கொண்டிருப்பதால் கண்டலேறு அணையிலிருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறந்து விடும்படி தமிழக அதிகாரிகள் கடந்த சில நாட்களுக்கு முன் ஆந்திர அரசுக்கு மீண்டும் கடிதம் எழுதினர்.

    இதையடுத்து நேற்று காலை கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா தண்ணீர் திறந்து விடப்பட்டது. தற்போது 300 கனஅடி தண்ணீர்திறந்து விடப்படுகிறது. இதனை படிப்படியாக உயர்த்த அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர்.

    கண்டலேறு அணையின் கொள்ளளவு 68 டி.எம்.சி. ஆகும். இன்று காலை 6 மணி நிலவரப்படி 10 டிஎம்சி தண்ணீர் இருப்பு உள்ளது.

    கோடை வெயிலால் கிருஷ்ணா நதி கால்வாய் வறண்டு காணப்படுகிறது. இதன் காரணமாக தண்ணீர் பாயும் வேகம் மிகவும் குறைவாக உள்ளது. அதாவது ஒரு நாளைக்கு 25 கிலோ மீட்டர் தூரம் வரைதான் தண்ணீர் பாய்ந்து வருகிறது.

    கண்டலேறு-பூண்டி இடையே தூரம் 177 கிலோ மீட்டர் ஆகும். இதன்படி பார்த்தால் கிருஷ்ணா நதி நீர் இந்த வார முடிவில் தமிழக எல்லைக்கு வந்தடைய வாய்ப்பு உள்ளது. தமிழக எல்லையில் இருந்து பூண்டி ஏரிக்கு செல்ல கூடுதலாக மேலும் ஒருநாள் ஆகும்.

    கிருஷ்ணா நதி நீர் பூண்டி ஏரிக்கு வந்தடைந்தாலும் உடனடியாக சென்னைக்கு தண்ணீர் சப்ளை செய்ய முடியாது. பூண்டி ஏரியின் உயரம் 35 அடி. 3231 மில்லியன் கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கலாம். இன்று காலை நிலவரப்படி ஏரியில் வெறும் 13 மில்லியன் கனஅடி தண்ணீர் மட்டும் இருப்பு உள்ளது.

    கிருஷ்ணா நீர் வந்ததும் நீர் மட்டம் குறைந்தது 30 அடியாக உயர்ந்த பின்னரே பூண்டி ஏரியில் இருந்து புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு மற்றும் சென்னை குடிநீர் வாரியத்துக்கு தண்ணீர் திறந்துவிட முடியும். #Krishnawater

    கண்டலேறு அணையில் இருந்து இன்று கிருஷ்ணா நதி நீர் கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டது. நீர்வரத்தின் அளவை பொறுத்து சென்னை குடிநீர் தேவைக்கு தண்ணீர் அனுப்பப்படும். #Krishnawater
    சென்னை:

    சென்னை நகர மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்ற தமிழக அரசு ஆந்திர அரசுடன் 1983ல் கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தை வகுத்தது.

    அதன்படி ஆந்திர அரசு நெல்லூர் அருகே உள்ள கண்டலேறு அணையிலிருந்து பூண்டி ஏரிக்கு வருடந்தோறும் 12 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும். ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டிஎம்சி, ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டி.எம்.சி.யும் தண்ணீர் வழங்க வேண்டும்.

    இதற்காக கண்டலேறு அணையிலிருந்து பூண்டி ஏரி வரை 177 கிலோ மீட்டர் தூரம் வரை கால்வாய் அமைக்கப்பட்டது. இந்த கால்வாய் ஆந்திராவில் 152 கிலோ மீட்டரும், தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை தாமரைகுப்பம் ஜீரோ பாயிண்டியில் இருந்து பூண்டி ஏரி வரை 25 கிலோ மீட்டர் தூரமும் உள்ளது.

    கிருஷ்ணா நதி நீர் ஒப்பந்தப்படி ஜூலை முதல் அக்டோபர் வரையிலான கொடுக்க வேண்டிய 8 டி.எம்.சி. தண்ணீர் இன்னும் திறக்கப்படவில்லை.

    ஆந்திராவில் பற்றாக்குறை நிலவுவதால் தண்ணீர் திறக்க முடியவில்லை என்று ஆந்திர அதிகாரிகள் தெரிவித்தனர்.

    மேலும் அக்டோபர் மாதம் 2 டி.எம்.சி. தண்ணீர் திறந்து விடுவதாக தெரிவித்தனர். இதற்கிடையே 15 நாட்களுக்கு முன்பு கிருஷ்ணா கால்வாயில் சென்னைக்கு தண்ணீர் திறந்துவிடும்படி தமிழக அரசு அதிகாரிகள் கடிதம் எழுதி இருந்தார்.

    இந்த நிலையில் ஆந்திராவில் உள்ள சோமசிலா அணைக்கு நீர் வரத்து அதிகரித்து உள்ளதால் அங்கிருந்து கண்டலேறு அணைக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது.

    இதையடுத்து கண்டலேறு அணையில் இருந்து இன்று கிருஷ்ணா நதி நீர் கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் ஆந்திராவில் உள்ள கிருஷ்ணா கால்வாயில் பயணித்து காளஹஸ்தி வந்ததும் அங்கிருந்து திருப்பதிக்கு குடிநீர் தேவைக்காக அனுப்பப்படுகிறது.

    அதன்பிறகு நீர்வரத்தின் அளவை பொறுத்து சென்னை குடிநீர் தேவைக்கு கிருஷ்ணா கால்வாயில் தண்ணீர் அனுப்பப்படும். #Krishnawater

    ×